ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ராகி, சோளம், வெங்காயம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு குறுகிய கால பயிரான சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
மூன்று மாதப்பயிரான வெங்காயம், ஏக்கர் ஒன்றுக்கு நான்கு டன் வரை மகசூல் கிடைக்கும். மேலும், வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெங்காயப்பயிரில் தண்ணீர் சூழந்ததால், அழுகல் நோய் தாக்கி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் செடியிலேயே சின்னவெங்காயம் அழுகியதால், நான்கு டன் மகசூல் கிடைப்பதற்கு பதிலாக ஒரு டன் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்துக்கு அதிக விலை கிடைக்கும்போது நோய் தாக்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.