ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திப்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனக் கோயிலின் முகப்பு வாயில் பூட்டப்பட்டு அறிவிப்பு பதாகை ஒட்டப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தினமான இன்று பக்தர்கள் கோயிலுக்கு வந்து கோயிலின் முன்புறம் நுழைவுவாயில் முன்பு நின்று கற்பூரம் பற்ற வைத்து நெய் தீபம் ஏற்றி பயபக்தியுடன் பண்ணாரி அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதோடு கோயில் முன்பு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.