ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியிலிருந்து முடுக்கன்துறை வரை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து, தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டு பல மாதங்களாகி விட்ட நிலையில் பணிகள் நடைபெறாமல் காலதாமதமானது.
இந்த நிலையில் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து சாலையை அகலப்படுத்தி பின்பு சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில், இன்று (ஜன.23 ) அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளின் முன்பகுதிகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்தப் பணியின் போது, தாளவாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு சாலையை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தனர். பவானிசாகர் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.
ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்ட பின்னர் சாலையை அகலப்படுத்தி புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முடிந்ததா அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு?