ஈரோடு: பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் சத்தியமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய முத்தரசன், "மத்திய அரசிற்கு அதிமுக அரசு கொத்தடிமாயாக உள்ளது. மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. புயல், இயற்கை சீற்றங்களுக்கான நிவாரண நிதியைக்கூட பெற முடியவில்லை. தற்போது முதலமைச்சர் பாஜகவோடு சேர்ந்ததால் சாமியாராக மாறிவிட்டார். ஸ்டாலினுக்கு சாபமிடும் சாமியாராக அவர் உள்ளார்.
தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாகவும் மற்ற தொகுதிகளில் மறைமுகமாகவும் என மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவின் பெயரில் பாஜகதான் போட்டியிடுகிறது. முதலமைச்சர் பதவியை ஏலம் எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. வருமான வரித்துறை அண்மைக்காலமாக சங்பரிவார் அமைப்பாக மாறிவிட்டது.
திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுப்பதற்கு குறுக்கு வழியில் பாஜக முயற்சிக்கிறது. எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. கரோனா காலத்தில் மக்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கியது" என்றார்.