ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று(ஜன.9) சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு -கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்கறி, பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. மற்ற சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கைக்குழந்தையுடன் தம்பதி வந்த காரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது, அவர்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருப்பூர் மருத்துவமனை செல்வதாக கூறினர். பின்னர் காவல்துறையினர், முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் குழந்தையை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? அதற்கு உரிய மருத்துவ சீட்டு ஆவணம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அந்த தம்பதி முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உண்மையாகவே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையா? என மறுபடியும் கேட்டுள்ளனர். பின்னர் அந்த தம்பதி, உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.
உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என அவர்களை எச்சரித்து, முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.