ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டமைப்பின் தலைவர் ஆல்வின் ராஜேஷ்குமார் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "ஈரோடு மாவட்டத்தின் பிரதான சாலையான பிரப் சாலைக்கு மீனாட்சி சுந்தரனார் சாலை என சமீபத்தில் தமிழ்நாடு அரசால் பெயர் சூட்டப்பட்டது.
இதனை மாற்றி மாவட்டத்திற்குப் பல்வேறு நல உதவிகளை செய்த 'brough' பெயரையே மீண்டும் வைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தரும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு தருவோம்" எனக் கூறினார்.
மேலும் அவர் பேட்டியின்போது முன்வைத்த கோரிக்கைகளாவன:
- கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறைத் தோட்டம் அமைத்துத் தர வேண்டும்,
- ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச குடியிருப்புகள் கிடைத்திட வழிவகைச் செய்திட வேண்டும்,
- கிராமப்புறங்களில் செயல்படும் தேவாலயங்களில் நடைபெறும் ஜெபங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதற்கு பாதுகாப்பும், அங்கீகாரமும் அளிப்பதற்கு உத்தரவாதம் தர வேண்டும்,
- பட்டியலின கிறிஸ்தவ ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தடையின்றி பெற வழிவகை செய்ய வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ திருச்சபைகளில் கூட்டமைப்பின் செயலாளர் டேவிட், பால் கிரிஸ்டோபர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி