ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடு, கன்றுகளை வாங்கிச் செல்ல தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வருவது வழக்கம்.
இன்று (ஏப்.24) கூடிய சந்தையில் கரோனா தொற்றின் அச்சத்தை உணராத வியாபாரிகள், விவசாயிகள் பெரும்பாலானோர் முகக்கவசமின்றி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக கூடியதால் அந்தியூரில் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சந்தைக்கு வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய கிருமிநாசினி தெளிப்பு, உடல் வெப்பநிலை கண்டறிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதனால், கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சந்தையில் போதுமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.