கஸ்பாபேட்டையைச் சேர்ந்த லோகநாதன் ஈரோட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற லோகநாதன், உறவினர்கள், நண்பர்களுடன் காவிரி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஒருவர் அடித்துச் செல்லப்படுவதாக அங்கிருந்தவர்கள் கூச்சலிட, உடனடியாக லோகநாதனும் அவரது உறவினரும் ஆற்றில் குதித்து காப்பாற்றச் சென்றுள்ளனர்.
இதனிடையே தண்ணீரின் வேகம் அதிகம் இருப்பதாக காவல்துறையினர் எச்சரித்ததையடுத்து, லோகநாதனின் உறவினர் கரை ஏறினார். ஆனால், லோகநாதன் கரை திரும்ப முடியாமல் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கடந்த 15 ஆம் தேதி இரவு முழுவதும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் பரிசலில் தீவிரமாகத் தேடினர். ஆனாலும் லோகநாதன் கிடைக்கவில்லை.
கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நஞ்சை இடையனூர் பகுதியில், பாறையின் இடுக்கில் அழுகிய நிலையில் லோகநாதனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் கூராய்விற்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை காப்பாற்ற சென்று அதே ஆற்றிலேயே லோகநாதன் உயிரை விட்டது அவரது குடும்பத்தாரையும், அக்கம்பக்கத்தினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: முகநூல் பழக்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை