ஈரோடு: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்குத் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 778 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 104.24 அடியாக உள்ளதால் எந்த நேரமும் அணை நிரம்பலாம் எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் 1,800 அடி தண்ணீரும் என மொத்தம் 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பில் புதிதாக சேர்ந்த நெய்!