ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலத்திற்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதன்படி, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலத்திற்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் கடலை, சோளம், எள் சாகுபடி செய்ய 5 நனைப்புக்கு ஜனவரி 7ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் 10 நாள் தண்ணீர்த் திறப்பு, தண்ணீர் நிறுத்தம் 10 நாள் என விட்டுவிட்டு மொத்தம் 120 நாள்களில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும்.
முதலில் 500 கனஅடி நீரும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வாய்க்காலில் 2300 கனஅடியாக திறந்துவிடப்படும். அதேபோல காலிங்கராயன் வாய்க்காலுக்கு நாளை முதல் மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
தமிழ்நாடு அரசு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் தண்ணீர் திறப்பு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்