ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் அதிகளவு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதேபோல் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
அப்புகார்களின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் சிவசங்கர், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் குழந்தைவேலு, நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி, சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் காவல் துறையினரும் இணைந்து தெப்பக்குளம் பகுதியில் வடமாநில வணிகர்களின் கிடங்குளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் வீடுகளைக் கிங்குகளாக வாடகைக்குப் பிடித்து அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களும், நெகிழியால் செய்யப்பட்ட டம்ளர், தட்டு, பை உள்ளிட்ட பொருள்களும் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வடமாநில வணிகர்களின் 5 கிடங்குகளில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும், 8 டன்னிற்கும் அதிகமான நெகிழிப் பொருள்களும் பறிமுதல்செய்து நகராட்சி வாகனத்தில் கொண்டுச்செல்லப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பொருள்களை மொத்த விற்பனைக்காக வைத்திருந்த ஐந்து கிடங்குகளுக்கும் அலுவலர்கள் சீல்வைத்தனர்.
நெகிழிப்பொருள்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் அபராதம் விதித்தனர். உணவுப் பாதுகாப்புத் துறையாலும், வருவாய்த் துறையினாலும் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தத் திடீர் சோதனையால் கோபிசெட்டிபாளையம் வணிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.