ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கும் மேல் கள்ளிபட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி வேளாண் விளைநிலம் உள்ளது.
இப்பகுதிகளில் அடிக்கடி வேளாண் விளைநிலத்திற்குள் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் புகுந்து சாகுபடி பயிர்களை அதிகளவு சேதம் ஏற்படுத்திவருகின்றன.
இந்நிலையில் கணக்கம்பாளையம் சுண்டக்கரடு பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயியின் மூன்று ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் கன்றுடன் புகுந்த மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் அழித்தும் சேதப்படுத்தியுள்ளன.
இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் யானைகளை விரட்டிவந்த நிலையில், அவரையும் மீறி வாழைத் தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இங்கு சுமார் மூன்றாயிரம் வாழை மரங்கள் உள்ள நிலையில் இனி நாள்தோறும் யானைகள் படையெடுக்க ஆரம்பித்துவிடும் என்று அச்சமடைந்துள்ளார்.
சேதமடைந்த வாழை மரங்களை டி.என்.பாளையம் வனத் துறையினர் ஆய்வுமேற்கொண்டு, யானைகளைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்ததாகவும் விவசாயி கூறினார். ஆனால் வனவிலங்களை விரட்டச்செல்லும் விவசாயிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வனவிலங்கு மனித மோதல்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் வனத் துறையினர் வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் ஆழமாக அகழி வெட்டி பாராமரிக்க வேண்டும் அல்லது மின்வேலி அமைத்து வனவிலங்குகளைத் தடுக்க வேண்டும் என்றும் வனவிலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை வனத் துறை வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.