ஈரோடு: தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
ஈரோட்டில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த பத்து நாள்களாக அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று பட்டிமன்றமே தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வந்தது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு கழகத்தை வழிநடத்தி செல்கின்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் நல்லதொரு முடிவை எடுத்துள்ளனர்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருந்துறை தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ரூ.1752 கோடியில் நிறைவேற்றி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது ஈரோட்டு மக்களுக்கு நல்லதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: “2021இல் அதிமுக ஆட்சி தொடரும்”- முதலமைச்சர் பழனிசாமி உறுதி