ஈரோடு: காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக பவானி பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனம் நடத்திவரும் ஜெகன் என்பவரிடம் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து மாதந்தோறும் வட்டி கட்டிய நிலையில் அசல் பணத்தைத் திரும்ப செலுத்த முற்பட்டபோது 13 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என நிதி நிறுவனர் ஜெகன் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தனது நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி இன்று (டிசம்பர் 6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் வந்த சக்திவேல் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சரின் எல்லாப் பிரிவுகளுக்கும் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் கூறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்து காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: கழிவறைத் தொட்டியில் குழந்தை கொல்லப்பட்ட விவகாரம்: தாய் கைது