ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு-கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நேற்று (ஜூன்19) மாலை காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று, அவ்வழியே வந்த வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லாமல் திரும்பினர். இதைத் தொடர்ந்து அந்த யானை அவ்வழியே கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த சரக்கு லாரியை ஆக்ரோசமாக தடுத்து நிறுத்தியது.
இதைக்கண்ட லாரி ஓட்டுனர் அச்சம் அடைந்தார். லாரியின் முன்பு கட்டப்பட்டிருந்த பூ மாலையை, காட்டு யானை தனது தும்பிக்கையால் பறித்துக்கொண்டது. பின்னர், மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காய்கறி வாகனத்தை தும்பிக்கையால் தள்ளிய யானை - உயிர் தப்பிய ஓட்டுநர்