ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். கதலி, நேந்திரம், ஆந்திர ரஸ்தாளி, ஜி9 உள்ளிட்ட வாழை ரகங்கள் இப்பகுதியில் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி, சொலவனூர், பெரியகள்ளிப்பட்டி பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. காற்றின் வேகம் தாங்காமல் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. நேந்திரம், கதலி, ஜி9 உள்ளிட்ட வாழை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்பகுதியில் மட்டும் சுமார் 30 லட்சம் ருபாய் மதிப்புள்ள வாழைகள் முறிந்து விழுந்துள்ளதாகவும் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.