கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை வனப்பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. இதைப் பார்த்த குஞ்சூர்பதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார், வீரபத்திரன் ஆகியோர் உயிரிழந்த யானையின் தந்தத்தை வனத்துறையினருக்கு தெரியாமல் எடுத்து அதை வெளி ஆட்களுக்கு விற்க முயற்சி செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்துள்ளனர். இறந்த யானையின் இரண்டு அடி நீளமுள்ள தந்தத்தை, இவர்கள் இரண்டு வருடமாக விற்க முயற்சித்ததும் இவர்களுக்கு மேலும் இருவர் உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இருவரையும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கு உள்ளது என்பது தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க :