கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே இயங்கி வரும் தென்னை நார் தொழிற்சாலைக்கு 16 வயது சிறுமி தினசரி வேலைக்குச் சென்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை சந்தித்துள்ளார்.
பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் அது காதலாக மாறியது. தொடர்ந்து, இளைஞர், சிறுமியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து வீட்டில் கூறாமல் இளைஞருடன் சிறுமி சென்றார். இந்நிலையில், சிறுமி வீட்டில் இல்லாததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் சிறுமி காதலித்து வந்தது தெரியவந்தது.
இளைஞர் போக்சோவில் கைது
இதையடுத்து, அந்த இளைஞர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அஜய் சர்மா ராஜ் என்பது தெரியவந்தது. அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், தற்சமயம் நூல் மில்லில் பணிபுரிவதும் தெரியவந்தது.
உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டூர் காவல் துறையினர், இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு காவல் துறையினர் நடத்திய மேல் விசாரணையில், இளைஞர் சிறுமியுடன் உடலுறவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை