இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள என்டிசி ஆலைகள் மூடப்பட்டன. தற்போது, இதன் தாக்கம் குறைந்து இதர பகுதி தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், என்டிசி ஆலைகளை மட்டும் திறப்பதற்கு ஆலை நிர்வாகம் முன்வர மறுக்கிறது. இதை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாய் இழந்துள்ளனர். இது குறித்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும் ஆலை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, காந்திபுரத்தில் உள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் இன்று (நவம்பர் 19) நடைபெற்றது. அப்போது, சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட எம்.பி.,க்கள் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்க அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கரோனா தொற்றின் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பஞ்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி மூடப்பட்டது. தமிழ்நாட்டில் ஏழு தேசிய பஞ்சாலைகள் செயல்படுகின்றன. அதில் கோவையில் ஐந்து பஞ்சாலைகளும், காளையார் கோவில், கமுதகுடியில் தலா ஒன்று என ஏழு பஞ்சாலைகள் உள்ளன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக உத்தரவுபடி கரோனா காலத்தில் முடுப்பட்ட இந்த பஞ்சாலைகளில் இருந்த இருப்புகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள என்டிசி மில்களை உடனடியாக திறக்க உள்துறை அமைச்சராகிய நீங்கள் (அமித்ஷா) தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த என்டிசி பஞ்சாலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து விரிவாக எடுத்துரைக்க தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவம்பர் 22ஆம் தேதி சென்னையில் உங்களை சந்திக்க முடிவெடுத்துள்ளோம்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.