கோயம்புத்தூர்: சென்னையில் நடந்த தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தாயும் மகளுமாக கலந்து கொண்ட மாசிலாமணி மற்றும் தாரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். வீட்டு வேலை செய்து வந்த மாசிலா மணி பளு தூக்கும் வீராங்கனை ஆனது எப்படி? அவரது மகளுக்கும் இந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து அறிய கோவையில் உள்ள அவர்களை நாடினோம்.
மாசிலாமணியின் கணவர் ரமேஷ் திருமண பந்தல் அமைப்பாளராகவும், கூலி தொழிலாளியாகவும் உள்ளார். மாசிலாமணி வீட்டு வேலை செய்து வருகிறார். தன்னுடைய குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கிய மாசிலாமணி முதன் முதலில் பளுதூக்கும் ஆர்வம் எப்படி வந்தது என்பது குறித்து விளக்குகிறார்.
தான் வீட்டு வேலைக்காக சென்ற இடத்தில் உடல் பருமனாக இருப்பதால் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதாக கூறும் மாசிலாமணி, தனது வீட்டில் உள்ளோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களை சமாதானப்படுத்தி உடற்பயிற்சியை தொடர்ந்ததாக கூறுகிறார்.
உடற்பயிற்சி கூடத்தில் மற்றவர்கள் பவர் லிப்டிங் செய்வதை பார்த்து தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும். உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் சிவக்குமார் இலவசமாகவே தனக்கு பயிற்சி அளித்ததாகவும் மாசிலாமணி கூறுகிறார். மாசிலாமணியின் ஆர்வத்தைப் பார்த்து 11ம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் தாயுடன் பவர் லிப்டிங் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
மாசிலாமணி, தாரணியின் தீவிர பயிற்சியின் காரணமாக, திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பவர் லிப்டிங் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் மாசிலாமணி டெட் லிப்டில் தங்கப்பதக்கமும், மகள் தாரணி 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர். இதனையடுத்து, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேசியளவிலான பவர் லிப்டிங் போட்டியில் தாரணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
![பயிற்சியாளர்களுடன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-06-mother-daughter-special-story-visu-7208104_24092022201750_2409f_1664030870_53.jpg)
மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரை அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயார்படுத்துவதே தனது முதல் கடமை என்கிறார் மாசிலாமணி. இரண்டு வீட்டுக்கு வேலைக்கு போவதால் மாதம் 4000 ரூபாய் வருமானம் வருகிறது. இதை வைத்து தான் இரண்டு பெண்களை படிக்க வைத்து, மிகுந்த சிரமத்திற்கு இடையே குடும்பத்தை கவனித்து, பயிற்சியும் எடுத்து வருகிறோம். தங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள ஸ்பான்சர் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனக்கு அரசு வேலை கிடைத்தால், இன்னும் பல சாதனைகளை செய்ய காத்திருப்பதாக மாசிலாமணி தெரிவித்தார்.
இது குறித்து தாரணி கூறுகையில், அம்மாவின் பயிற்சியை பார்க்க சென்றபோது பழுதுக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பயிற்சி எடுத்தவுடன் சுலபமானது. மாநில அளவிலான போட்டியிலும் தேசிய அளவிலான போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்தார்.
பயிற்சியாளர் சிவக்குமார் கூறுகையில், "ஆறுமாதத்திற்கு முன்பு பிட்னஸ்க்காக மாசிலாமணி உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தார். அங்கு மற்றவர்கள், பவர் லிப்டிங் செய்வதை பார்த்து தானும் செய்ய முடியுமா? என என்னிடம் கேட்டார். ஆறு மாதம் அவருக்கு கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டதால், தமிழகளவில் மெடல் வென்றிருக்கிறார். தேசிய அளவிலான, போட்டியில் தாரணி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மரண தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்