கோயம்புத்தூர்: அன்னூர் அடுத்த காட்டம்பட்டி குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்க மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வேங்கை, நாவல், கருவாச்சி உள்ளிட்ட 35 வகையான 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 33 விழுக்காடு நிலப்பரப்பை வனப்பகுதியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். சேலம் - சென்னை இடையே பயண தூரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க புதிய விரைவுச் சாலை திட்டம் பொதுமக்களின் கருத்து கேட்காமல் செயல்படுத்த மாட்டோம்" என்றார். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ராமராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும் - செல்லூர் ராஜூ