கோயம்புத்தூர்: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை பாஜக தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
மக்கள் சேவை மையம் மற்றும் தனியார் மருத்துவமனை (சிவா மருத்துவமனை) இணைந்து நடத்தும் இம்முகாம் புலியகுளம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் பலரும் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொண்டனர்.
இலவச மருத்துவ ஆலோசனை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (செப்.17) முதல் அக்டோபர் மாதம் வரை பல்வேறு நல உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக தெற்கு தொகுதியில் புலியகுளம் அருகிலுள்ள அம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை இன்று (செப்.18) நடத்துகிறோம்.
டாஸ்மாக் அருகே மருத்துவ முகாம்
இதில் பெண்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனகள் பெறலாம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும் பிரதமர் காப்பீடு திட்டம் மூலம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவாக தடுப்பூசி செலுத்துவதில் நேற்று (செப்.17) இந்தியா புதிய சாதனையை செய்துள்ளது. மதுக்கடைகளுக்குச் செல்ல கூடிய ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. எனவே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாமை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடிக்கு தினமும் பிறந்தநாள் வந்தால் மகிழ்ச்சி - ப. சிதம்பரத்தின் வஞ்சப்புகழ்ச்சி