கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளிமுடி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அக்கிராமத்திற்குச் செல்கிற அரசுப்பேருந்து செல்லாமல் காடம்பாறை ஈபி கோட்டர்ஸ் வரை சென்று அங்கிருந்து திரும்புகிறது. இதனால் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் காலையிலும் இரவிலும் வனத்திற்குள் நடந்து செல்கிற அவலநிலை நீடிக்கிறது.
இது மட்டுமில்லாமல் கடந்த இரண்டாண்டு காலமாக முதியோர் உதவித்தொகை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் அவர்கள் கூறியுள்ளார்கள். இரவு நேரங்களில் சோலார் மின்விளக்கு எரியாததால், கிராமமே இருளில் மூழ்கிக்கிடக்கிறது .
இதேஇடத்தில்தான் காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் பலநூறு கிலோமீட்டர் தாண்டி, கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்னுற்பத்தி நடக்கிற பகுதியிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்களுக்கு மின்வசதி மறுக்கப்படும் கொடுமை இங்குதான் நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு வாழ்கின்ற பழங்குடி மக்கள் தங்களுடைய வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நோக்கில், அடிப்படை வசதிகள் செய்துதர மறுக்கும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பழங்குடி மக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். தேர்தலின்போது அள்ளி வீசுகிற வாக்குறுதிகளில் அடிப்படை வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றையாவது செய்து தருவார்களா? என்ற ஏக்கத்தோடு இம்மக்கள் காத்திருக்கின்றனர்.