மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் பாரம்பரிய தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம், கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் கயிறு தொழில் சார்ந்த ஊரக தொழில் முனைவோர்கள் மற்றும் கைவினைஞர்களை குழும (க்ளஸ்டர்) முறையில் ஒருங்கிணைத்து உதவி செய்கிறது. தமிழ்நாட்டில் 14 கயிறு குழுமங்கள் ரூ. 49.30 கோடி மானியத்துடன், ரூ. 63.06 கோடி திட்ட செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சுமார் 20 ஆயிரத்து 413 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கயிறு குழுமம் ரூ. 6.5 கோடி மானியத்துடன் ரூ.8.88 கோடி திட்ட செலவில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
எக்கோ காயர் க்ளஸ்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட செயல் நிறுவனமாக இயங்கிவருகிறது. பொள்ளாச்சி குழுமத்தின் பொது வசதி மையத்தில் தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களான தரைவிரிப்பு, நார்வலை மற்றும் கயிறு மிதியடி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இக்குழுமத்தின் பொது வசதி மையம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உற்பத்தியை தொடங்கியது.
இதுவரை விற்றுமுதலாக ரூ.32.33 கோடி ஈட்டியுள்ளது. 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.15.16 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி பகுதியில் இதுவரை சுமார் 3 ஆயிரத்து 350 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கயிறு தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.350இல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண ரானே இத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது கயிறு வாரியத் தலைவர் குப்புராம், கயிறு வாரிய மண்டல இயக்குநர் பூபாலன், எக்கோ காயர் க்ளஸ்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார், துணைத் தலைவர் நாகராஜ், இயக்குநர்கள் வெங்கிடுபதி, ரத்தினம், இளங்கோவன், சேனாதிபதி, கனகராஜ், கணேஷ் ராமசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
தொழிற்சாலையின் நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் பேசுகையில், கரோனா பரவல் காலகட்டத்தில் நார்த்தொழில் மிகவும் பின்னடைவைச் சந்தித்தது. அதிலும் கரோனா அதிகம் பாதித்த சீனாவிலிருந்தும், பொருளாதார சரிவால் இலங்கையிலிருந்தும் கன்டெய்னர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செயல்படும் நார் தொழிற்சாலைகள் ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ளன. ஆகவே மத்திய அரசு கன்டெய்னர்கள் தட்டுப்பாட்டிற்குத் தீர்வும், நாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை சேமித்து வைக்க பெரிய அளவிலான குடோன் வசதிகளையும் செய்து கொடுக்க முன்வந்தால் இத்தொழில் நன்கு வளர்ச்சி பெறும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பாராட்டு - மா. சுப்பிரமணியன்