கோயம்புத்தூர்: மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில், இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிவீதி கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்குச் சொந்தமான ஒரு மாடி கொண்ட வீடு உள்ளது. நேற்று (செப்.6) மாலை பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்தது. இருப்பினும், தரை தளத்தில் இருந்த மூவர் இடிபாடுகளில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேறினர். முதல் தளத்தில் இருந்த வனஜா, அவரது மகள் கவிதா, மருமகள் ஸ்வேதா (27), பேரன் தன்வீர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மேலும் இக்கட்டடம் இடிந்து விழுந்ததில் பக்கத்திலுள்ள ஓட்டு வீடும் இடிந்து சேதமடைந்தது. இதில் கஸ்தூரி (60), கோபால் (70) ஆகிய வயதான தம்பதியர், இவர்களது மகன் மணிகண்டன் (35), மற்றொரு தனி அறையில் தங்கியிருந்த மனோஜ் (45) என, மொத்தம் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் வனஜா, கவிதா மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய தன்வீர் என்ற 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பின்னர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மனோஜ் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். வனஜாவின் மருமகள் ஸ்வேதாவும், கோபால்சாமி என்ற 70 வயது முதியவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
கஸ்தூரிம்மாள்(70) , மணிகண்டன் (35) ஆகியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இடிந்து விழுந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.