திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர், அவிநாசியப்பன். சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர்கள் முருகன் , வீரப்பன் ஆகியோர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களிடம் கம்பம் பகுதியிலிருந்த நபர் ஒருவர் அறிமுகமாகி, தன்னிடம் யானைத் தந்தங்கள் இருப்பதாகவும் அதை விற்றுத்தருமாறுகூறி, நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து மூலமாக அவிநாசியப்பனுக்கு அனுப்பி உள்ளார்.
தந்தங்களைப் பெற்றுக்கொண்ட அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் தந்தங்களை விற்பதற்கு முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமாருக்குத் திருப்பூரில் யானைத் தந்தங்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதை உறுதிப்படுத்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் யானைத் தந்தங்களை வாங்குவதுபோல அவிநாசியப்பனிடம் பேசி, அதனைக் காட்டக் கூறியுள்ளார். 80 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயித்த பின்பு செந்தில்குமாருக்கு அவிநாசியப்பன் யானைத் தந்தங்களைக் காட்டிய போது, யானைத் தந்தங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் வீரப்பன், முருகன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 4 அடி உயரமுள்ள 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானைத் தந்தங்களையும்; இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:First On: 'ஐ' பட வில்லன் நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது