கோயம்புத்தூர் ஆனைகட்டி பகுதியில் 18 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில், பழங்குடியின பெண்கள் இணைந்து தர்சனா பெண்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக்கடையை இப்பகுதியில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார், புனிதராஜ், சாமிநாதன் ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டியின் துணையோடு நியாயவிலைக் கடையை சொசைட்டியாக மாற்றி, அரசு ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இல்லாத போது, அவர்கள் நடத்திய நியாயவிலைக் கடையை சொசைட்டியாக மாற்றியதை கண்டித்து அப்பகுதியை சார்ந்த பழங்குடியின மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இக்கடையிலிருந்து நியாய விலைப்பொருள்களை கேரளாவிற்கு கடத்தவே ஆளும் கட்சியினர் சொசைட்டியாக மாற்றியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அரசு ஆணையை ரத்து செய்து மீண்டும் பழங்குடியின மக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.