கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், "கோவையைப் பொறுத்தவரை விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் என இரண்டு வகை பாம்புகளால் கடிபட்டு அழைத்துவரப்படுபவர்கள் சரிபாதி உள்ளனர். விஷமில்லாத பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் இரண்டு புள்ளிகள் தெரியும். ரத்தம் உறைவு தன்மை இயல்பாக இருக்கும். விஷமுள்ள பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் ரத்தம் வெளியேறும். ரத்தம் உறைவு தன்மை குறைந்துவிடும். சில நேரங்களில் அதிக ரத்த உறைவு தன்மை ஏற்பட்டு, இதயம், மூளை, சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பாம்பு கடித்த இடத்தில் சோப்பு, டெட்டால் போட்டு கடித்த இடத்தை கழுவிவிடலாம். பாம்பு கடித்த இடத்துக்கு மேல் கட்டுபோடுவதால் பெரிய பலன் இருக்காது. ஏனெனில், உடலின் உள்ளே இருக்கும் ரத்தக்குழாயில் ரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். பாம்பு கடித்தவரை நடக்கவோ, ஓடவோ விடக்கூடாது. அவரை அப்படியே படுக்கவைத்து உடல் அசையாமல் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டும். உடலில் அசைவிருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும். பாம்பு கடிபட்டவர் பதற்றமடையக்கூடாது. பதற்றமடையும்போது ரத்த ஓட்டம் அதிகரித்தாலும் விஷம் பரவிவிடும்.
இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவருக்கு தைரியமூட்ட வேண்டும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அந்த அளவுக்கு அவரை நாம் காப்பாற்றலாம். எந்தப் பாம்பு கடித்தது என்பது தெரிந்தால் அதற்கேற்ற சிகிச்சை விரைந்து கொடுக்க முடியும்.
கடந்த ஆறு மாதங்களில் பாம்பு கடித்த 67 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 24 மணி நேரமும் பாம்பு கடித்தவர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது. முடிந்தவரை பாம்பு கடியால் சிக்கியவரை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துவந்தால் அவரை பிழைக்க வைக்க விடலாம்" எனத் தெரிவித்தார்.