கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் அரசு பேருந்துகளை பயணச்சீட்டு பரிசோதகர்கள் பேருந்து நிலையத்தின் உட்பகுதியிலும், பேருந்து நிலையத்தின் வெளிபகுதியிலும் வைத்து சோதனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6:20 மணியளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் TN 38 N 3002 என்ற எண் கொண்ட 5ஆம் நம்பர் பேருந்தில் தனது மனைவி, உறவினருடன் எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார்.
![ticket checker behaving badly try to beat old man bad words kovai பயணசீட்டு பரிசோதகர் கோவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4052296_covai-3.bmp)
அப்போது, அங்கே வந்த பயணச்சீட்டு பரிசோதகர் உடுமலை ரவி என்பவர், முதியவரிடம் பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு முதியவர் தனது மனைவியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு 'பயணசீட்டு பரிசோதகர் நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் என்னிடம் எப்படி பேச வேண்டும் என்று உனக்கு தெரியாதா' என்று முதியவரை மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அருகே இருந்த முதியவரின் உறவினர் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு முதியவரை காலால் எட்டி உதைக்க முற்பட்டார்.
![ticket checker behaving badly try to beat old man bad words kovai பயணசீட்டு பரிசோதகர் கோவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4052296_covai-4.bmp)
மேலும் முதியவரை தாக்கிவிட்டு அவர் மதுபோதையில் உள்ளார் எனவும் ரவி குற்றம் சாட்டினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் பயணசீட்டு பரிசோதகர்கள் பயணிகளிடம் தரகுறைவாக நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது வயதான பயணி ஒருவரை தாக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயணசீட்டு பரிசோதகரின் மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்தையும் அந்த பகுதியில் இருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் முதியோர் என்றும் பாராமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டதற்கு நான் ஒரு அரசு அலுவலர் என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா என பத்திரிகையாளரையும் மிரட்டினார்.
பின்னர் பிரச்சனை திசை மாறுவதை அறிந்து கொண்ட பயணச்சீட்டு பரிசோதகர் அந்த பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பயணசீட்டு பரிசோதகரின் நடவடிக்கை குறித்து பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அந்த அலுவலர்கள் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என அதிகார தொனியில் மிரட்டினர்.
இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேவை நிறுவனத்தில் பணிபுரியும் சில பயணசீட்டு பரிசோதகர்களும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பொதுமக்களுக்கு சேவையாக இந்தப் பணியை செய்யதாலும், அவர்களின் கண்ணியத்தை இதுபோன்றவர்கள் கலங்கபடுத்தாமல் இருந்தாலே போதும்.