ஒடிசாவை சேர்ந்தவர் ஹிம்சேகர் நாயக் (30). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சக தொழிலாளரை கொன்ற வழக்கில் பல்லடம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 3ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்தபோதே கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரண்டு முறை ஹிம்சேகர் நாயக் தப்பிச் சென்றுள்ளார். உடனடியாகவே மீண்டும் அவரை காவல் துறை கைது செய்தனர்.
மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க, காவல் துறையினரின் கவனக்குறைவே காரணம் என தொடச்சியாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அலுவலர்கள் விசாரணை நடத்தி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து, பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், தலைமைக் காவலர் திருநாவுக்கரசு, ஆயுதப்படை காவலர் ராஜா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சுமித்சரண் நேற்று (ஆக.14) உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவை கல்லூரி மாணவர்!