கோவை கொடிசியா அரங்கில் இன்று மக்கள் நீதி மய்யத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன், செய்தியாளர்களை சந்தித்து அவரது வாக்குறுதிகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக நினைத்து பல காலம் ஆகிவிட்டது. இங்குள்ள எம்எல்ஏக்களால் செய்ய முடியாதது, மத்திய அரசுடன் உள்ளவர்களால் மட்டும் செய்ய முடியுமென்றால் அது ஜனநாயக இந்தியா இல்லை.
என்னை வெளியூர்க்காரன் என்று விமர்சிக்கும் வானதி சீனிவாசன் மயிலாப்பூரைச் சேர்ந்தவர். என்னைப் பற்றி விமர்சிக்கும் நடிகர் ராதாரவி அவர் வாங்கிய சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார். அவர் பார்க்கும் வேலைகளைக் கூட தற்போதைய அமைச்சர்கள் பார்ப்பதில்லை. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தில் நான் நடித்து இருக்கிறேன். நான் வாங்கிய சம்பளத்திற்கு வரியும் கட்டியிருக்கிறேன். அதனால் உதயநிதி நேர்மையானவர் என்று அர்த்தமில்லை” என்று கூறினார்.
கோவை தெற்கு தொகுதிக்கான கமலின் உறுதிமொழிகள்!
- அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும்.
- நீண்ட நாட்களாக பட்டா இன்றி இருக்கும் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும்.
- மத்திய சிறைச்சாலை ஊருக்கு வெளியே மாற்றப்பட்டு அங்கு ஒருங்கிணைந்த மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும்.
- தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.
- தொகுதி முழுவதும் ஆறு அடி ஆழத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.
- ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லம் அமைத்து மருத்துவக் காப்பீடு செய்து தரப்படும்.
- அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகங்கள் அமைக்கப்படும்.
- அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும்.
- அரசு சேவைகள் வீடு தேடி வரும்.
- போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் இலவச மையங்கள் அமைக்கப்படும்.
- பொதுமக்களின் பங்களிப்போடு நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படும்.
- அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை உட்படுத்தி மாணவர் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்படும்.
இதையும் படிங்க: அமைச்சர் ஜெயக்குமாரை, மக்கள் ஓட ஓட விரட்டப் போகிறார்கள் - ஐட்ரீம் மூர்த்தி