கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சிக்கதாசம்பாளையம் ஊராட்சித் தலைவராக இருப்பவர், அதிமுகவைச் சேர்ந்த விமலா. இந்த ஊராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த வினோத் குமார் துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் வினோத் குமார் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காமல் முறைகேடு செய்வதாகக்கூறி, வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வினோத் குமாரை துணைத் தலைவராகத் தேர்வு செய்வதற்கு கடந்த ஜனவரி மாதம், அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் பணம் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. துணைத்தலைவராகப் போட்டியிட்ட வினோத் குமார் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுத்து தனக்கு வாக்களிக்க செய்துள்ளார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் துணைத் தலைவராக முயற்சிக்கும் நிலையில், அவருக்கு மற்ற வார்டு உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியின்போது துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட வினோத் குமாருக்கு எதிராக வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பணம் கொடுத்த போது, தனது ஆதரவாளர்கள் மூலம் பதிவு செய்த காட்சிகளை வினோத் குமார் வெளியிட்டுள்ளாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வெளியிட்டனரா எனத் தெரியாத நிலையில், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பணம் பெறும் காட்சிகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, பணம் கொடுத்த மற்றும் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!