இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொடா லொக்கா. கொலை, கொள்ளை, போதை கடத்தல், ரியல் எஸ்டேட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இலங்கையில் மாஃபியாக்களுக்குள் நடந்த சண்டையில் காவல்துறை வாகனத்தில் சென்ற ஏழு பேரை கொன்றுவிட்டு இந்தியா ்வந்தார். சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்கா பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய இடங்களில் தலைமறைவாக இருந்தார்.
இவருக்கு மதுரை வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். மேலும், கோவையில் சேரன் மாநகர் பகுதியில் கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அங்கொடா லொக்கா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரதீப்சிங் என்ற பெயரில் வசித்து வந்த அங்கொடா லொக்காவின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி கொடுத்த ஆதார் விவரங்களை விசாரித்ததில் அவை போலி என தெரியவந்தது. இதனையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இலங்கையைச் சேர்ந்த தாதா அங்கொடா லொக்கா தான் பிரதீப் சிங் என்றும், கோவையில் இறந்தவரின் உடலை எதற்காக மதுரையில் தகனம் செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஐஜி சங்கர், டிஎஸ்பி ராஜூ தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைத்தார். பின்னர், சிவகாமி சுந்தரி, தியானேஷ்வரன், அமானி தான்ஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே உண்மை புலப்படும் என சிபிசிஐடி தெரிவித்தது. அதன்படி, அங்கொடா லொக்கா தங்கியிருந்த வீட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அவர் சென்ற கடை, ஹோட்டல் உரிமையாளர், பணியாளர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், அங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக இலங்கை ஊடகத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது கூட்டாளிகள் காவல்துறையிடம் இலங்கையில் புகார் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய உளவு பிரிவான புலனாய்வுக் குழு சிபிசிஐடி உடன் அங்கொடா லொக்கா வழக்கு தொடர்பாக கலந்தாய்வு செய்துள்ளது.
இந்த வழக்கிற்கென ஐ.ஜி சங்கர் அமைத்த 7 குழுக்களில் ஒரு குழு மதுரை சென்றுள்ளது. ஒரு குழு லொக்காவின் கல்லீரல், சிறுகுடல், இரைப்பை ஆகிய உடல் உறுப்புகளை டிஎன்ஏ ஆய்விற்காக சென்னை ஆய்வகத்திற்கு எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள், களப்பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு!