கோயம்புத்தூர்: பட்டியலினத்தவர்கள் வசிக்கும் இடத்தில் பயன்படுத்தும் பாதையில் புதிதாக தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை பஞ்சாயத்திற்குட்பட்ட கொண்டசாமி நகரில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த நகருக்கு எதிரிலுள்ள கண்ணபிரான்புரம் நகர் என்ற பெயரில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அதற்குரிய நான்கு சாலைகளும் பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, அந்த சாலைகள் கொண்டசாமி நகர் சாலைகளில் இணைப்பு சாலைகளாகவுள்ளது.
இதை அப்பகுதி பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்தபோது, அந்த சாலைகளை தற்போது தடுத்து 'தீண்டாமைச் சுவர்' எழுப்பி வைக்கப்பட்டதாகவும், பட்டியலின மக்கள் புதிதாகப் போடப்பட்ட வீட்டுமனை பகுதிகளுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இது போன்ற சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றும், கடந்த 17ஆம் தேதி பன்னிமடை ஊராட்சி செயல் அலுவலரிடம் இதுகுறித்து மனு அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் இப்பிரச்னையில் ஆட்சியர் உடனே தலையிட்டு, அந்த தீண்டாமை சுவரை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: செல்போனில் சீரியல் பார்த்தவாறு அதிவேகமாக பைக் ஓட்டிய நபர் மீது வழக்குப்பதிவு!