தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கிய தினமாக திகழும் தைப்பூச திருநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று திருத்தேர்களில் கோயிலை சுற்றிலும் உலா இழுத்து வரப்படும்.
இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருக கடவுளை வழிப்பட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டே இருந்து வருவதால், இந்நாளில் பக்தர்கள் பலரும் விரதமிருந்து காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
பலரும் தைப்பூச திருநாளுக்கு முந்தைய தினமே பாதயாத்திரையாக நடந்து வந்து கோயிலில் காத்திருந்து அதிகாலையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையும் திருத்தேர் உலாவையும் காண்பர். ஆனால் இந்த வருடம் தைப்பூசத் திருவிழாவானது வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.
கோயம்பத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 3:30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் 5:30 மணி அளவில் வெள்ளையானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் திருத்தேர் உலாவும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்விற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருத்தேர் உலாவும் முழுமையான தேரில் நடைபெறாமல் தேரின் சக்கரங்களில் மட்டும் வெள்ளை யானை வாகனத்தில் திருத்தேர் உலா நடைபெற்றது. இந்த இரு நிகழ்விற்குப் பின்னரே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
பக்தர்களும் அதன்படியே சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருநாள் என்றாலே திருக்கல்யாண உற்சவத்தை காண்பதற்காகவே பக்தர்கள் பலரும் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து காத்திருந்து திருக்கல்யாண உற்சவத்தை காண்பர். ஆனால் இம்முறை காணாதது வருத்தம் அளிக்கிறது என்று பக்தர்கள் பலரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பூதலிங்க சாமி கோயிலில் தை திருவிழா தேரோட்டம்