கோயம்புத்தூர்: கோவையில் நடந்த விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார்.
வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
அப்போது அவர், “திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள 1280 அடுக்குமாடி குடியிருப்புகள், திரு குமரன் நகர் பகுதியில் 1248 அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை மாவட்டத்தில் இராஜாக்கூர் பகுதியில் 1088 அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இருங்களூர் பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்பு சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கிவைத்தார்.
மேலும் நெய்வேலியில் புதிய 2×500 மெகாவாட் அனல் மின் திட்டம், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 750 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம், ஒன்பது சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உழவர் பெருமை
பின்னர் விழாவில் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று கோயம்புத்தூரில் நான் இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது, இது தொழில் நகரம்.. புதுமை படைக்கும் நகரம். ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். பவானிசாகர் அணை நவீனமயமாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இது இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு நீர் பாசனத்திற்கு உதவும். இதன் வாயிலாக ஈரோடு திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெரும். நமது விவசாயிகளுக்கு இத்திட்டம் உதவி அளிக்கும்” என்றார். அத்தருணத்தில் வான்புகழ் வள்ளுவர் குறளை மேற்கொள்காட்டி, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்றார்.
நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு
தொடர்ந்து அவர் பேசுகையில், “நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்காற்றி வருகிறது. இந்நிலையில், மின்திட்டங்களை தொடங்கி வைத்ததற்கு பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் 7 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் மின் திட்டத்தில் 65 சதவீதம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்தும்.
உலக அளவில் வர்த்தகம் மற்றும் சரக்கு கையாளும் மையமாக இந்தியா பிரதிபலிக்கின்றது. துறைமுகம் சார்ந்த ஆராய்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை சாகர் மாதா திட்டத்தின் மூலம் நன்கு உணரமுடியும். இத்திட்டத்தின் கீழ், 2015ஆம் ஆண்டு முதல் 2035 ஆம் ஆண்டு வரையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மப்பேடு சரக்கு வாகன நிறுத்த பூங்கா
இவற்றுள் துறைமுகங்களை நவீனமயமாக்கல், புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், இணைப்புச் சாலைகள் விரிவாக்கம், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி, ஆகியவை அடங்கும். அதுமட்டுமல்லாமல் சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு பகுதியில் பல்வேறு சரக்குகளை கையாளும் ஒரு சரக்கு வாகன நிறுத்த பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளர்ச்சி சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. துறைமுகத்தில் ஏற்கனவே 500 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது 140 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
வ.உ.சிதம்பரனாரின் தொலைநோக்கு பார்வை
கடல்சார் வணிகம், துறைமுக வளர்சியில் நீண்ட பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு. கப்பல் போக்குவரத்தில் வ.உ.சிதம்பரனாரின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. சாகர் மாதா திட்டத்தின் மூலம் வஉசி துறைமுகப் பகுதியில் உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. ரயில், மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்து செல்லும் நேரமும் குறையும்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுமார் 332 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4344 வீடுகளை திறந்து வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன நிலையில், குடியிருப்புகள் இல்லாத மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
வளர்ச்சி- சுற்றுச்சூழல்
வளர்ச்சியை உறுதி செய்வதற்கே அனைவருக்கும் வீடு என்பதாகும். வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். நகர்புற வளர்ச்சியில் அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும். இந்தத் தொழிநுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்விருக்கும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம்” என்றார்.
கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி - (முழு வீடியோ தொகுப்பை காண இங்கே சொடுக்கவும்)