பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட சமூக ஆர்வலரும், பெண் விடுதலை கட்சித் தலைவருமான சபரிமாலா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பரிசீலனையின் போது அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தனது வேட்புமனு திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, திமுக வேட்பாளர் டாக்டர்.வரதராஜனுக்கு ஆதரவாக அவர் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபரிமாலா, “பொள்ளாச்சியில் அராஜகம் ஏவி விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதிமுகவினர் வன்முறையை கையாள்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கும் ஆடியோ வீடியோ ஆதாரங்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இந்த பொள்ளாச்சி பாலியல் நிகழ்வில் 3 கல்லூரி மாணவிகள் இறந்துள்ளதாக அவர்களின் தாயார்கள் என்னிடம் தெரிவித்தனர். அவ்வழக்கை வயிற்றுவலி என்று முடித்து விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அதேபோல், ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த, பாதிக்கப்பட்ட பெண்களும் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் நியாயம் கிடைக்க டாக்டர்.வரதராஜன் இங்கு வெற்றியடைய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆனால் தான் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் நியாயம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மதுபோதை இல்லாத தொகுதி என்பதே இலக்கு’ - மதுரை மத்தியத் தொகுதி மநீம வேட்பாளர் பேட்டி