கோயம்புத்தூர்: கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், தவுஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில், இந்த வழக்கில் தொடர்புடைய சிகாபுதீன் என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிகாபுதீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று (ஜன.20) கோவை போத்தனூர் அருகே உள்ள திருமறை நகர் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான இல்லத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நோட்டுகள், லேப்டாப், பென்ட்ரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஏதேனும் கொலை சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் இருக்குமேயனால் இந்த வழக்கு தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது