கோயம்புத்தூர்: இலங்கை போதை பொருள் தாதா எனக் கருதப்பட்ட அங்கொடா லொக்கா, கோவை பீளமேடு பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில் அமானி தான்ஜி என்கிற பெண்ணுடன் 2018இல் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்த அங்கொடா லொக்கா உடலை போலி ஆணவங்களை பயன்படுத்தி அவரது உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்திருந்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் அமானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் அங்கொடா லொக்கா தானா? இல்லை வேறுநபரா என்ற கேள்வி எழும்பிய நிலையில் அவரது DNA எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. உறுதி செய்வதற்காக இலங்கையில் உள்ள அவரது தாயாரின் DNAவும் கொண்டு வரப்பட்டு ஆய்விற்கு உட்படுத்திய நிலையில் இருவரின் DNAவும் 99% பொருந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இறந்தது அங்கொட லொக்கா தான் என உறுதியாகியுள்ளது.
அதே சமயம் அங்கொட லொக்கா இறந்தது இயற்கை மரணமா அல்லது கொலையா என்கிற விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில் லொக்காவின் இருதயம் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அவரது மரணம் இயற்கை மரணம் தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன் லொக்கா இந்தியாவில் வசிக்க உதவியாக இருந்த பெங்களூருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அங்கொடா லொக்கா விவகாரம் குறி்த்து சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் விளக்கம்!