கோவை: இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடிவருகிறார்கள். அதன்படி, கோவையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று (டிசம்பர் 23) நள்ளிரவு முதலே சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நள்ளிரவு 11.30 மணிக்குச் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் கோவை மறை மாவட்ட பேராயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
கரோனா காலம் என்பதால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில், உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்றுலிருந்து விடுபட வேண்டியும், எதிர்காலங்களிலும் நோய்த்தொற்று விடுபட வேண்டும் என்றும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
புத்தாடை உடுத்தி மகிழ்ச்சி
இரவு 12 மணிக்கு பேராயர் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பைச் சுட்டிக்காட்டும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை தனது கையில் கொண்டுவந்து ஏந்தி காண்பித்தார். இதில் ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும், ஆங்காங்கே நட்சத்திர விளக்குகளும் தொங்கவிடப்பட்டு பார்வைக்கு ரம்மியமாகக் காட்சியளித்தன.
தேவாலயங்களில் கொண்டாட்டம்
இதேபோல், புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், சவுரிபாளையம் புனித சவேரியார் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம் என மாநகர், புறநகரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தனர். மேலும், கேக் வெட்டியும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் விழாவைச் சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 25