கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க ரயில்வே துறை புது முயற்சி கோவை போத்தனூர் - பாலக்காடு ரயில் பாதை வனப்பகுதி வழியாகச் செல்கிறது. ஏ, பி என்ற இரண்டு ரயில் தடங்களில் நாள்தோறும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், வனப்பகுதிக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் ‘ஏ’ லைனும், 3 கி.மீ. தூரம் ‘பி’ லைனும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இரவு நேரங்களில் ரயில்வே பாதையைக் கடக்கும் காட்டு யானைகள், அவ்வப்போது ரயிலில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
சூரிய ஒளியுடன் செயல்படக்கூடிய கருவி
இந்த ரயில் பாதையில் மட்டும் இதுவரை 28 காட்டு யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் கர்ப்பிணி யானை உள்ளிட்ட மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனத் துறை, ரயில்வே துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
![யானைகள் தண்டவாளம் பக்கம் வராமலிருக்க புதுத்திட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14133062_870_14133062_1641646798669.png)
இந்நிலையில், தமிழ்நாடு எல்லையை ஒட்டிய கேரள பகுதியான வாளையாரில் இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி அதிக சத்தம் எழுப்பக்கூடிய கருவியை ரயில்வே துறையினர் பொருத்தியுள்ளனர்.
சோதனை முயற்சியாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் சூரிய ஒளியுடன் செயல்படக் கூடிய ஒசை எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யானைகள் அதிக நடமாடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கருவிகளைப் பொருத்த திட்டம்
இதனை ரயில்வே துறையினர் வாளையார் ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்துவருகின்றனர். இந்தக் கருவியானது இரவு 7 மணிமுதல் காலை 6 மணிவரை செயல்படும். அப்போது இந்தக் கருவியிலிருந்து தேனீக்கள் சத்தம், புலி உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
புலி உறுமல், தேனீக்கள் சத்தம் ஆகியவை காட்டு யானைகளை அச்சுறுத்தக்கூடியவை என்பதால், சத்தம் கேட்டு காட்டு யானைகள் ரயில் பாதையில் நுழையாமல் வேறு பாதையில் செல்லும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல ரயில் பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கூடுதல் பணியாளர்களைக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், ரயில்களின் வேகத்தைக் கண்டறிய 'ஸ்பீடு கன்' கருவியைப் பொருத்தவும் வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகையில், "கோவை - பாலக்காடு ரயில் பாதையில் ரயில் மோதி தொடர்ந்து யானைகள் உயிரிழக்கும் துயரம் நடந்துவருகிறது. யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனத் துறையும், ரயில்வே துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
யானைகள் புத்திசாலிகள்
இதன் ஒரு பகுதியாக, யானைகள் ரயில் பாதைக்கு வராமல் தடுக்கும் முயற்சியாக, வாளையார் அருகே புலி, தேனீக்களின் ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க இது மட்டும் தீர்வல்ல. ஆனால், தேனீ, புலி எழுப்பும் ஒலி கேட்டால் யானைகள் பயப்படும். யானைகள் புத்திசாலிகள். அதனால் தொடர்ந்து புலி, தேனீ இல்லாமல் சத்தம் மட்டும் வந்தால் யானைகளுக்குப் பழகிவிடும்.
யானைகளுக்குப் பயம் விட்டுப்போகும். அது மட்டுமில்லாமல் இரவு முழுவதும் வரும் தொடர் சத்தம் யானைகளின் இயல்பை பாதிக்கும். இந்தச் சத்தத்தால் பாதை மாறி யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. அதனால் யானைகள் வரும்போது மட்டும், இதனைச் செயல்படுத்திப் பார்க்கலாம்.
யானைகளின் வாழ்விடமான காட்டிற்கு யானைகள் செல்லக் கூடாது என நிர்பந்திக்க முடியாது. யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க கீழ்மட்ட பாதை, மேல்மட்ட பாதை, சம மட்ட பாதை ஆகியவை அமைக்க வேண்டும். மற்ற இடங்களில் கடப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: யானைகள் இறப்பை தடுக்க தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் - நீதிபதிகள் யோசனை