பொள்ளாச்சியில் உள்ள பிரபல ஜோதிடர் ஜோதி கிருஷ்ணா, திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து உலக நன்மை வேண்டியும், கரோனோ போன்ற பெருந்தொற்றிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் சத சண்டி மஹாயாகம் நடத்தினார்.
கடந்த மூன்று நாள்கள் தொடங்கிய யாகம் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பரிகார பூஜைகள் செய்தனர். பண்டைய காலங்களில் மன்னர்கள், மிகப்பெரிய செல்வந்தர்களுக்காக மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த யாகம் தற்போது மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறது.
சுமார் 603 வருடங்களுக்குப் பிறகு சூரியன், சந்திரன், குரு, சனி, சுக்கிரன், புதன் ஆகிய 6 கிரகங்கள் மகர ராசியில் இணைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் இருந்து மிதுன ராசியைப் பார்த்த பிறகு தான் கரோனா என்ற பெரும் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் எனக் கூறும் ஜோதிடர், மகர ராசியில் ஏழு கிரகங்களின் இணைவு நடப்பதால் உலக மக்களின் இன்னல்கள் நீங்கும். கரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து விடுபடுவார்கள். அதற்காக இந்தச் சிறப்பு யாகம் நடத்தப்படுவதாகவும், கடந்த ஆண்டு கிரகங்கள் நெருப்பிலிருந்து காற்றைப் பார்த்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மண்ணிலிருந்து நீரைப் பார்ப்பதால் பொங்கி வரும் பிரச்னைகள் தானே அழிந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.