கோவை: கோயம்புத்தூரில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பயிற்சி நடப்பதாக காணொலி ஒன்று இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து பல்வேறு அமைப்புகள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் அப்பள்ளிக்கு சென்றபோது அவ்வமைப்பினர் பயிற்சி முடித்து விட்டுச்சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இதற்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, "ஆர் எஸ் எஸ் மூலமாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை திமுகவினர் அரசியல் லாபத்திற்காக மேற்கொண்டுள்ளதாக தகவல்.
கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது" என விளக்கம் அளித்துள்ளது. மேலும் அதற்கான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் இது குறித்து மாநகராட்சி சார்பிலும் கல்வி குழு சார்பிலும் விசாரணை தொடர்ந்து வருகிறது
இதையும் படிங்க: யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி... 3 மாணவிகள் காயம்... 10-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் மயக்கம்...