கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே கோவை-பொள்ளாச்சி ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. ரயில் வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, சாலையில் ரயில்பாதை குறுக்கீடும் பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று திட்ட பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ரூ.40 கோடி 1.8 கி.மீ. நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கும், மீதமுள்ள ரூ.15 கோடி புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கும் செலவிடப்படும் என்றார்.
நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் பாலம் அமைக்கும் பணி விரைவாக நடைபெறும் என்றும் இந்த புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஒரு வருடத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார். பாலத்தின் பணிகள் நிறைவடைந்தால் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில், ரயில் வரும் நேரங்களிலும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்லலாம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.