ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது. சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்காக சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரி, கருமத்தம்பட்டி காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
கருமத்தம்பட்டி சரக காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் கணியூர் சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, “கோவை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து மிகுந்த ஆறு வழிச்சாலை ஆகும். இந்தச் சாலையில் விபத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளன” எனத் தெரவித்தார்.
தொடர்ந்து வாகன ஓட்டிகள் இடையே ஏற்படுத்திய போதிய விழிப்புணர்வே இதற்குக் காரணம் எனக் கூறியவர், வாகன ஓட்டிகளிடம் விபத்து குறித்து மேலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்குகளில் வெளிப்படும் அதிக வெளிச்சம் மூலம் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம், கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரி முதன்மைச் செயலாளர் நடராஜன் உள்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இந்திய பாகிஸ்தான் எல்லையில் தமிழக ராணுவ வீரர் பலி!