பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சொன்னதே நான் தான். ஆனால் இவ்வழக்கில் என்னையும், என் குடும்பத்தையும் வேண்டுமென்றே தொடர்புபடுத்தி இழிவாக பேசி வருகிறார் ஸ்டாலின்.
என் மீதோ, எனது மகன்கள் மீதோ இது சம்பந்தமாக ஆதாரம் இருந்தால், என் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுகிறேன். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இருந்தால், ஆதாரத்தை சிபிஐயிடம் தரட்டும்” என்றார்.
அடுத்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. யார் தவறு செய்தாலும் அதிமுக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். ஓட்டுக்காக திமுகவினர் இதனை திசைத் திருப்புகின்றனர்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கஸ்தூரி வாசு, அம்மன்.கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், முன்னாள் அமைச்சர் தாமோதரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’