கரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கிய நிலையில் ரெம்டெசிவிர் மருந்து அதிகம் விற்பனையாகி வருகின்றன. இந்த மருந்துகளுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களாக கோயம்புத்தூர் அவிநாசி சாலையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 500 குப்பிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதால் பலராலும் இந்த மருந்தினை வாங்க இயலாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று காலை முதலே இம்மருந்தினை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் பகுதி பகுதியாகவே காவல் துறையினர் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்ததால் கல்லூரிக்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
நீண்ட நேரமாகியும் உள்ளே அனுமதிக்க தாமதம் ஆனதால் காத்திருந்தவர்கள் திடீரென சாலையில் திரண்டனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை வரிசையில் நிற்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் நீண்ட நேரமாக காத்திருந்தும் ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்று வரிசையில் நின்றனர். நாளொன்றுக்கு 500 வயால் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில் மருந்தின் விற்பனையை அதிகரிக்கும்படியும் விற்பனை மையத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ரெம்டெசிவிர் மருந்து காலாவதியான விவகாரம்’ - நசிமுதீன் பேட்டி