பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் அனைத்துக் கட்சி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் சார் ஆட்சியர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். முகவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையம்
முகவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் கைப்பேசி, மின்னணு கடிகாரம் அணிந்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 318 ஓட்டுச்சாவடிகளில் 23 சுற்றும், வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு 294 ஓட்டுச்சாவடிகளில் 21 சுற்றும் நடைபெறும்.
தபால் ஓட்டுகள்
காலை ஏழு மணிக்கு முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவர். தபால் ஓட்டுகள் காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை நடைபெறும். ஆதலால் முகவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.' எனக் கேட்டுக்கொண்டார்.
இதில், வட்டாட்சியர்கள் தணிகைவேல், வெங்கடாசலம், ஸ்ரீதேவி மற்றும் சுகாதாரத்துறை அனைத்துக்கட்சி முகவர்கள் கலந்துகொண்டனர்.