கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவரின் படம் பொருத்தப்பட்டதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியது.
கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தினுள் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் வைக்கப்பட்டது. வெள்ளை நிற உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து அதனை அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் காலம் காலமாய் வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்திலேயே காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படமானது வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்னை கிளம்பியபோது வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் இது பல ஆண்டுகளாகவே இதுபோன்றுதான் இருந்ததாக தகவல் தெரிவித்தது. ஆனால், இதை பலரும் மறுத்த நிலையில், இந்த படத்தை அகற்றிவிட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை நிற உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல நாட்களாகியும் அது மாறாமல் இருப்பது மீண்டும் சர்ச்சையானது. இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவரின் படம் மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை ஆடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை அங்கு மாட்டியுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!