கோயம்புத்தூர்: கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "கோவை மாநகரில் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த (செப்.22) ஆம் தேதியன்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணையும் நடத்தப்பட்டது.
அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணை அடிப்படையில், அவர் துடியலூரை சேர்ந்த ‘பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் பொறுப்பாளர் சதாம் உசைன் (31) என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதாக என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதாம் உசைன் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம்.... தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்...